சென்னை, மார்ச்.7-
பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 22 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
8 லட்சத்து 22 ஆயிரம் பேர்
பிளஸ்-2 தேர்வு 8-ந் தேதி தமிழ் முதல் தாளுடன் (நாளை) தொடங்கி 30-ந் தேதி அனைத்து தொழில்தேர்வுகளுடன் முடிவடைகிறது. பிளஸ்-2 தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 5,557 மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து மொத்தம் 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். சென்ற ஆண்டு மார்ச் 2011-ல் தேர்வு எழுதியவர்களைவிட, கூடுதலாக 37 ஆயிரத்து 430 மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு எழுதுபவர்களில், 3 லட்சத்து 53 ஆயிரத்து 6 மாணவர்களும், 4 லட்சத்து 7 ஆயிரத்து 969 மாணவிகளும் ஆவார்கள். மாணவர்களைவிட, மாணவிகள் 54 ஆயிரத்து 963 பேர் கூடுதலாக தேர்வு எழுத உள்ளனர். கடந்த ஆண்டைவிட, மாணவர்கள் 16,563 பேர் அதிகம் எழுதுகின்றனர். மாணவிகள் 20,867 பேர் அதிகமாக எழுதுகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கு மொத்தம் 1,974 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரில் 412 மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து மொத்தம் 50,201 மாணவ-மாணவிகள் 139 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இவர்களில், 22,669 பேர் மாணவர்கள், மாணவிகள் 27,532 பேர்.
புதுச்சேரி
புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 31 தேர்வு மையங்களில் 105 பள்ளிகளைச் சேர்ந்த 12,042 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். அவர்களில், மாணவர்கள் 5,401 பேர், மாணவிகள் 6,641 பேர் ஆவார்கள்.
பள்ளி மாணவர்களைத்தவிர, தனித்தேர்வர்கள் 61,319 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
பிளஸ்-2 தேர்வில் டிஸ்லெக்சியா, கண்பார்வையற்றோர் காதுகேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர உடல் ஊனமுற்றோருக்கான சொல்வதை எழுதுபவர், ஒரு மொழிப்பாடம் தவிர்ப்பு மற்றும் கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
வினாத்தாள் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு
வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைந்துள்ளதா? என முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களால் நேரில் ஆய்வு செய்து அமைக்கப்பட்டுள்ளன. கட்டுக்கோப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோரால் செய்யப்பட்டுள்ளன. அடிக்கடி மையங்களைக் கண்காணிக்க அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறு இன்றி தேர்வு
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் கூட்டத்தினைக்கூட்டி தேர்வுப் பணியில் எந்தவித சுணக்கமும் இன்றி, தவறில்லாமல் மிகுந்த பொறுப்புடன் செயலாற்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வினை எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காமல் செம்மையாக நடத்திட அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்கி, மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை, அரசு முதன்மைச் செயலர் ஆகியோரால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கலெக்டர் தலைமையில் தேர்வுக்குழு
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்வு மையங்களில் காவல்துறைப் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்வித்துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவார்கள். அக்குழுவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியாளர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் மாவட்டங்களில் அவர்களது எல்லைக்குட்பட்ட தேர்வு மையங்களை திடீர் பார்வை செய்து முறைகேடுகள், ஒழுங்கீனங்கள் எதுவும் நடைபெறாவண்ணம் தீவிரமாகக் கண்காணிப்பார்கள்.
பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த இணை இயக்குனர்கள் அனைவரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று அனைத்து தேர்வு நாட்களிலும் கண்காணிப்பு குழுக்களுடன் தேர்வு மையங்களை மேற்பார்வையிட்டு தேர்வுகள் சிறப்பாக நடைபெறுகிறதா? என்பதை கண்காணிப்பார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் தேர்வு மையங்களைப் பார்வையிட கண்காணிப்புக் குழுக்களை நியமித்துள்ளனர். இந்த கண்காணிப்புக் குழுக்கள் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளும்.
பிரச்சினைக்குரிய மையம்
இதுதவிர, ஒருசில மையங்களில் (பிரச்சினைக்குரிய) கண்காணிப்புக் குழுவினர் தேர்வு ஆரம்பித்து, தேர்வு முடியும்வரை அங்கேயே தங்கி தேர்வுப்பணிகளை மேற்பார்வையிடுவர்.
முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள், கண்காணிப்பு குழுவுடன் தேர்வு மையங்களைப் பார்வையிடுவார்கள். மேலும் தேவைப்படின், ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலரும் பிற மாவட்டங்களிலிருந்தும் கண்காணிப்பு குழுவினரைப் பெற்று குறிப்பிட்ட சில தேர்வு மையங்களைப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதிலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு உறுப்பினர்கள் தேர்வு மையங்களைத் தீவிரமாகக் கண்காணிப்பார்கள்.
தொழிற்படிப்புச் சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் இயற்பியல், கணிதம், விலங்கியல், வேதியியல், உயிரியல் மற்றும் தாவரவியல் ஆகிய 6 பாடங்களுக்குரிய தேர்வுகள் வருகிற 16, 19, 22 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளின்போது அனைத்து தேர்வு மையங்களிலும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக இருந்து தேர்வினை நடத்துவர்.
அண்ணாபல்கலைக்கழக அதிகாரிகள்
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் முக்கிய பாடங்களுக்கான தேர்வு நாட்களில் தேர்வு மையங்களைப் பார்வையிடச் சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்படுவர். எக்காரணம் கொண்டும் பொதுத்தேர்வு நேரங்களில், தேர்வு முடியும்வரை அப்பள்ளியைச் சேர்ந்த தாளாளர்களோ, ஆசிரியர்களோ, அடிப்படை பணியாளர்களோ தேர்வு நடக்கும் வளாகத்தில் இருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காப்பி அடித்தால் கடும் தண்டணை
துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாள்களைப் பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களைப் பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்து கொள்ளல், தேர்வுத்தாள் மாற்றம் செய்தல், ஆள் மாறாட்டம் செய்தல் போன் செயல்பாடுகள் கடுங்குற்றங்களாகக் கருதப்படும். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும். 2011-ம் ஆண்டு மேல்நிலைத் தேர்வில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டு தண்டனைப் பெற்றோர் எண்ணிக்கை 184. அனைத்து தேர்வர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது.
கட்டணம் இல்லை
பிளஸ்-2 பொதுத்தேர்வை தமிழ் வழியில் பயின்று தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழ் வழியில் பயின்று பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்து 569 ஆகும்.
தேர்வறையில் மாணவ-மாணவியரின் மன இறுக்கத்தைப்போக்கி, விடைகளைத் திட்டமிட்டு தேர்வுகள் நல்லமுறையில் எழுதுவதற்காக, வினாத்தாளினை மாணவ-மாணவியருக்கு வழங்கியவுடன், அதனை முழுமையாக படிப்பதற்காகப் பத்து நிமிட கால அவகாசமும், அதனைத் தொடர்ந்து பதிவெண் முதலான முக்கிய விவரங்களை விடைத்தாளின் முகப்புப் பக்கத்தில் பிழையின்றி எழுதுவதற்கென 5 நிமிட கால அவகாசமும் வழங்கப்படுகிறது.
தேர்வு மையங்களில் ஒழுங்கீனச் செயல்கள் புரிபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயலுமேயானால், பள்ளி தேர்வு மையத்தினை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தினை ரத்து செய்திடவும் பள்ளிக் கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆள்மாறாட்டம் செய்தால் பிடிபடுவார்கள்
இந்த மாதம், அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிளஸ்-2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் ரகசியக் குறியீடு மற்றும் புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
ஆள்மாறாட்டத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வர்களுடைய புகைப்படங்கள் பெயர்பட்டியலிலும், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டிலும் பதிந்து வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆள்மாறாட்டம் செய்தால் பிடிபடுவார்கள்.
பிளஸ்-2 தேர்வில் இந்த முறை அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களையும் தமிழ் வழியோடு ஆங்கில வழி வினாக்களும் ஒரே வினாத்தாளில் இடம்பெறும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், வரலாறு, வணிகவியல், பொருளியல் மற்றும் கணக்கியல் ஆகிய பாடங்களுக்கு சிறுபான்மை மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் உருது ஆகிய மொழிகளிலும் வினாத்தாள்கள் வழங்கப்படும். இந்த வினாத்தாள்களில் ஆங்கில வழியிலும் வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.
கைதிகள் எழுதுகிறார்கள்
சிறைவாசிகளும் கல்வியில் ஏற்றம் கண்டிட, சிறையிலேயே கடந்தசில வருடங்களாக தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பிளஸ்-2 தேர்வை 47 சிறைவாசிகள் புழல் சிறையிலும் 2 பேர் வேலூர் சிறையிலும் தேர்வு எழுதுகின்றனர்.
இவ்வாறு தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment