ஜெமினி பாலத்தில் பஸ் கவிழ்ந்த விபத்து! உயிர்காக்கும் பணியில் உடனடியாக களம் கண்ட டிஎன்டிஜே கடந்த ஜூன் 27ஆம் தேதி புதன்கிழமை அன்று சென்னை ஜெமினி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த நகரப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஜெமினி பாலத்தின் பக்கச் சுவர்களை இடித்துக் கொண்டு பாலத்திலிருந்து 20அடி ஆழத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 39 பயணிகள் காயங்களுடன் உயிர்தப்பினர். இந்த விபத்து நடந்த நேரத்தில் அந்த வழியாக மண்ணடியிலிருந்து தி.நகருக்கு சவாரி ஏற்றிச் சென்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினரான ஆட்டோ ஓட்டுனர் ரியாஸ் அவர்கள் அந்த வழியாக தேனாம்பேட்டையை நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளார்.
பஸ் கவிழ்ந்து விழுந்த போது, அவரது ஆட்டோ அந்த பாலத்திற்கு கீழே சென்று கொண்டிருந்துள்ளது. அல்லாஹ்வுடைய மிகப்பெரும் கிருபையால் சில நொடிப் பொழுது வித்தியாசத்தில்தான் இந்த ஆட்டோவும், ஆட்டோவில் சென்றவர்களும் வல்ல இறைவனால் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
இவரது ஆட்டோவிற்கு முன்புதான் பஸ் கவிழ்ந்து விழுந்துள்ளது. சில நொடிகள் இவரது ஆட்டோ முன்னேறிச் சென்றிருக்குமேயானால் 20அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து விழுந்த பேருந்து சரியாக இவரது ஆட்டோவின் மீதுதான் விழுந்திருக்கும். அந்த வகையில் அல்லாஹ் இவருக்கு பேரருள் புரிந்துள்ளான் என்றுதான் சொல்ல வேண்டும்.
பஸ் கவிழ்ந்து விழுவதை நேருக்கு நேராக ஆட்டோ ஓட்டும் பொழுது பார்த்த ரியாஸ் அவர்களுக்கு பஸ் விழுந்த இடம் புகை மூட்டமாக காட்சிதர, பேருந்திலிருந்து அலறல் சப்தங்கள் விண்ணைப் பிளக்க, தனது ஆட்டோவை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு, சவாரி வந்தவர்களிடத்தில், “விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய கடமை எனக்கு உள்ளது. எனவே நீங்கள் வேறு ஆட்டோ பிடித்து தி.நகருக்குச் செல்லுங்கள்” என்று கூறி அவர்களை அனுப்பி வைத்துவிட்டு உடனடியாக உயிர்காக்கும் உன்னதப் பணியில் குதித்துள்ளார் டிஎன்டிஜே உறுப்பினர் ரியாஸ்.
ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்த முதல் நபர் :
உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தனது தொலைபேசியிலிருந்து தகவல் கொடுத்துள்ளார். விபத்து நடந்த உடனேயே ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்த முதல் நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து டிஎன்டிஜேவிற்கு தகவல் பறந்தது:
ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகளுக்கு இந்தத் தகவலை உடனடியாக அவர் தெரிவிக்க, மாநில நிர்வாகத்திலிருந்து உடனடியாக வடசென்னை மற்றும் தென்சென்னை நிர்வாகிகளுக்கு தகவல் பறக்க, வடசென்னை மற்றும் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள கிளை நிர்வாகிகளுக்குத் தகவல் கொடுக்க 20நிமிடங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் கிளைகளின் நிர்வாகிகள் விபத்து நடந்த இடத்தை முற்றுகையிட்டு உயிர்காக்கும் மீட்புப்பணியில் ரியாஸ் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.
முதலில் தூக்கியது பேருந்து ஓட்டுனரைத்தான்:
தலைகுப்புற கவிழ்ந்திருந்த பேருந்தின் கதவுகள் அனைத்தும் ஆட்டோமேட்டிக் லாக் மூலமாக பூட்டப்பட்டிருந்ததால் கதவை திறந்து கொண்டு பயணிகளால் வெளியே வர முடியவில்லை.
ரியாஸ் அவர்கள் முதலில் டிரைவருடைய இருக்கைப் பகுதிக்குச் சென்று பேருந்து ஓட்டுனரை தூக்கியுள்ளார். அவரது காலில் பலத்த அடிபட்டிருந்த நிலையில் அவரது கையில் ஒன்றுக்கு இரண்டு செல்ஃபோன்கள் இருந்துள்ளது.
உடனடியாக பேருந்துக்கு மேலே ஏறிய அவர் பேருந்தின் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்த பிறகுதான் பயணிகள் ஒவ்வொருவராக வெளியில் வர ஆரம்பித்துள்ளனர்.
இவர்தான் பேருந்தின் கதவை உடைத்து அனைத்து பயணிகளும் உடனடியாக வெளியே வர உதவியுள்ளார்.
அங்கிருந்த சில சகோதரர்களுடன் சேர்ந்து இவர் கணிசமான பயணிகளை வெளியில் மீட்டெடுத்த பிறகுதான் விபத்து நடந்த அந்த இடத்திற்கு 108 மற்றும் அப்போலோ மருத்துவமனையின் ஆம்புலன்ஸ்கள் வந்து சேர்ந்துள்ளன.
விபத்து நடந்த இடத்திற்கு 20 நிமிடங்கள் வரைக்கும் எந்தக் காவல்துறை அதிகாரிகளும் உடனடியாக வரவில்லை என்பதை வேதனையுடன் சொன்ன ரியாஸ் அவர்கள், காவல்துறையினர் வந்தவுடன் அங்கு மீட்புப்பணி செய்து கொண்டிருந்த சகோதரர்களை துரத்தியடித்ததுதான் வேதனையிலும் வேதனை என்கின்றார்.
விபத்து நடந்ததை நேரில் பார்த்து, உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து, உயிர்காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தன்னலம் பாராமல் சேவையாற்றிய டிஎன்டிஜேயின் உறுப்பினரான ஆட்டோ ஓட்டுனர் ரியாஸ் அவர்களை அனைத்து மீடியாக்களும் பாராட்டியுள்ளன.
அவரது பேட்டியை முன்னணி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் அனைத்து பத்திரிக்கைகளும் முக்கியத்துவப்படுத்தி வெளியிட்டிருந்தன.
இவரது புகைப்படத்தோடு செய்தி வெளியிட்டு இவரது பேட்டியையும் அனைத்து செய்தி சேனல்களும் ஒளிபரப்பிய போதும் இது குறித்து கருத்து தெரிவித்த ரியாஸ் அவர்கள், “இந்த விபத்து நடக்கும் இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் என்னை அங்கு செல்ல வைத்து, பேருந்து என் ஆட்டோவின் மேல் விழாமல் பாதுகாத்து, அந்த விபத்தில் சிக்குண்டவர்களது உயிர்காக்கும் உன்னதப் பணியை செய்யும் வாய்ப்பை அல்லாஹ் எனக்கு வழங்கியதற்காக வல்ல இறைவனுக்கு நான் நன்றி செலுத்து கின்றேன்.
இதற்கான முழுமையான கூலியை வல்ல இறைவனிடத்தில் எதிர் பார்க்கின்றேன்” என்று கூறி முடித்தார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளையின் உறுப்பினராக உள்ள முத்துப்பேட்டையைச் சேர்ந்த ரியாஸ் அவர்கள் பிறமத அழைப்புப்பணி செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அழைப்புப்பணியில் இவர் காட்டும் ஆர்வம் குறித்து ஏற்கனவே உணர்வு 16:30 (மார்ச் 23 – 30) இதழில் நாம் விளக்கியுள்ளோம்.
ஆட்டோ ஓட்டுனராக உள்ள ரியாஸ் அவர்கள் தனது ஆட்டோவை ஏகத்துவ பிரச்சார வாகனமாக மாற்றிய செய்தியையும், கிறித்தவ விவாத டிவிடிக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக தனது ஆட்டோவையே பிரச்சாரக் களமாக அவர் பயன்படுத்தி கிறித்தவ பாதிரிமார்கள் மற்றும் கிறித்தவ சகோதரர்கள் மத்தியிலும், தனது ஆட்டோவில் சவாரி வரக்கூடிய பிறமத சகோதரர்கள் மத்தியிலும் அவர் செய்யும் பிறமத அழைப்புப்பணி குறித்து அந்த இதழில் விரிவாக விளக்கி யிருந்தோம்.
இத்தகைய நிகழ்வுகளின் மூலம் இஸ்லாத்தைச் சரியான கோணத்தில் விளங்கிக் கொண்ட வர்களான ஏகத்துவவாதிகள், தாங்கள் எங்கு சென்ற போதிலும், தங்களது உயிர் மூச்சான இந்த அழைப்புப் பணியையும், மறுமையில் மகத்தான நன்மைகளைப் பெற்றுத்தரும் மனித நேயப் பணிகளையும் செய்வதிலேயே குறிக்கோளாக இருப்பார்கள் என்பது தெளிவாகின்றது.
மேலும் இத்தகைய செயல்களை ஊக்குவிப்பதும், அதை செவ்வனே செய்வதும், அதற்கு முதலிடம் கொடுத்து முக்கியத்துவம் அளிப்பதும்தான் இந்த ஜமாஅத்தின் தலையாயப் பணி.
அதற்காகத்தான் இந்த ஜமாஅத் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றது. மறுமை வெற்றி ஒன்றுதான் இந்த ஜமாஅத்தின் குறிக்கோள் என்பதை அழுத்தம் திருத்தமாக இத்தகைய நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. இத்தகைய நிகழ்வுகள் இந்த ஜமாஅத்தின் நோக்கத்தை இன்னும் அழுத்தம் திருத்தமாக தெளிவுபடுத்துகின்றன.
இந்த ஜமாஅத்தினரின் தன்னலம் பாராத இந்தப் பணி சிறக்கவும், இம்மை மறுமை வெற்றியை நாம் பெறவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
No comments:
Post a Comment